5 March 2026

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு

Introduction

நல்லாட்சி (Good Governance) என்ற கொள்கையின் முக்கிய நோக்கம் அரசு சேவைகள் மக்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று சேர வேண்டும் என்பதாகும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகின்றன.

உங்களுடன் ஸ்டாலின் – மக்கள் சேவை முகாம்கள்

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மூலம் அரசு சேவைகள் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. நகர்ப்புறங்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் மற்றும் கிராமப்புறங்களில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகள் வழங்கப்படுகின்றன. மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் Public Service Delivery-ஐ மேம்படுத்த மற்றும் மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சிரமத்தை குறைக்க உதவுகிறது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம்

மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி முன்னேற்றத்தை மேம்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 15 செப்டம்பர் 2022 அன்று முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் 30,992 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு சுமார் 18.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் பள்ளி வருகை அதிகரிப்பு, Dropout rate குறைவு மற்றும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

தாயுமானவர் திட்டம்

19 பிப்ரவரி 2024 அன்று அறிமுகமான தாயுமானவர் திட்டம் வறுமையை ஒழித்து சமூக பாதுகாப்பை வலுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் சுமார் 5 லட்சம் ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்க நோக்கமாகக் கொண்டுள்ளது. முதியவர்கள், ஆதரவற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக உள்ளனர்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக செயல்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை கிடைக்கிறது.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் சிசுக் கொலை தடுப்பு, பெண்கல்வி மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு அரசின் முதலீட்டு நிதி வழங்கப்படுவதன் மூலம் பெண்களின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றம் ஊக்குவிக்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்

கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்தை பாதுகாக்க மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 29,95,098 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். மொத்தமாக ₹3,755.53 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

விடியல் பயணத் திட்டம் – பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பெண்கள் வேலை, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்குச் செல்ல எளிதாகியுள்ளது. 2023 ஜூலை மாதத்தில் மட்டும் 22 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் சமூக சுதந்திரம் அதிகரித்துள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

மக்களின் உடல்நலத்தை முன்னெச்சரிக்கையாக பரிசோதிக்க தமிழ்நாடு அரசு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் 1256 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இலவச முழு உடல் பரிசோதனை வழங்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

Conclusion / Way Forward

தமிழ்நாடு அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல் அவை அடித்தட்டு மக்களிடம் முழுமையாக சென்றடைவது முக்கியம். இதற்காக நிர்வாக திறன், போதுமான நிதி, மனிதவளம் மற்றும் திட்ட கண்காணிப்பு (Monitoring) ஆகியவற்றை அரசு வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் தமிழ்நாட்டின் மனித வள வளர்ச்சி மற்றும் சமூக நல வளர்ச்சி மேலும் வலுப்படும்.