21 January 2026
தமிழகப் பொருளாதாரம் மற்றும் சமூக நலத் திட்டங்கள்
பொருளாதார வளர்ச்சி
ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டி நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ₹12.16 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆளுநர் உரை – பேரவையில் நடந்த நிகழ்வுகள்
தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் பேரவையிலிருந்து வெளியேறினார். பின்னர் 108 பக்கங்கள் கொண்ட உரை பேரவையில் வாசிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவைத்தலைவர் அப்பாவு அந்த உரையை தமிழில் வாசித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட மொத்தம் ரூ.6,936 கோடி மதிப்பிலான பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
1.30 கோடி பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத் தொகையாகப் பெறுகின்றனர். இதுவரை ரூ.33,464 கோடி இந்தத் திட்டத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை பங்களிப்பு ரூ.13,000 கோடி மேலும் ஆண்டுதோறும் ரூ.11,000 கோடி அரசுப் பங்களிப்பாக வழங்கப்படும்.
மகளிர் விடியல் பயணம்
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர்.
சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊட்டச்சத்து
கடந்த 5 ஆண்டுகளில் 4.9 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 19.34 லட்சம் குழந்தைகள் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள்
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள், 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அணுகுமுறை – குற்றச்சாட்டு
மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் தமிழக அரசை அணுகுவதால் மாநிலத்துக்குரிய திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. இது தமிழக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மொழிக் கொள்கை – ஹிந்தி திணிப்பு
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) மூன்றாம் மொழி கட்டாய அறிவிப்பு மறைமுக ஹிந்தி மொழித் திணிப்பாகும். மத்திய அரசு இதை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் நிவாரணம்
மிக்ஜாம், ஃபென்சால் புயல்கள் காரணமாக தமிழகம் பெரும் சேதத்தை சந்தித்தபோது மத்திய அரசு சொற்பமான நிதி மட்டுமே விடுவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் ஜிஎஸ்டி விவகாரம்
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான ரூ.3,548 கோடி மத்திய அரசு விடுவிக்காததால் முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது.
ஜிஎஸ்டி விகித மாற்றங்கள் காரணமாக மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் மெட்ரோ திட்டங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்கும் புதிய திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்துக்கான நிதி உடனடியாக வழங்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரித்தது மாறுபட்ட அணுகுமுறையைக் காட்டுகிறது.
பெண்கள் நலன் மற்றும் கல்வி
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான, நியாயமான தங்கும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது (40.3%).
ஆன்மிகம், நிர்வாகம் மற்றும் மக்கள் தொடர்பு
352 கோயில்களில் ரூ.425 கோடியில் திருப்பணிகள் 76 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 8,037 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 36.62 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
முடிவுரை
“கனவு சொல்லுங்க” திட்டம் மூலம் 1.91 கோடி குடும்பங்களின் தேவைகள் அறியப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் வேகமான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.