21 January 2026
தமிழக நிர்வாகம் மற்றும் ஆளுநர் உரை சர்ச்சைகள்
ஆளுநரின் வெளிநடப்பு
2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. எனினும், தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல், தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், தனது கருத்துக்களைப் பேச அனுமதிக்காமல் ஒலிவாங்கி (Mic) அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் நிகழ்வாகும்.
அரசியலமைப்புச் சட்டப் பின்னணி (Static GK)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 (1)-ன் படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரிலும், ஆளுநர் மாநில அமைச்சரவை தயாரித்து வழங்கும் உரையை நிகழ்த்த வேண்டும். இது அரசின் கொள்கை விளக்க உரையாகக் கருதப்படுகிறது. ஆளுநர் வாசிக்காத பகுதிகள் அவை குறிப்பில் ஏற்றப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டுகள்
தமிழக அரசு தயாரித்த உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம், பள்ளிக் கல்வியின் தரம் குறைவு போன்ற பிரச்சினைகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.